மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் பளுதூக்குவதில் மீராபாய் சானு, பேட்மிண்டன் சிந்து, குத்துச் சண்டை லவ்லினா ஆகியோர் நம்பிக்கை தரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கைக்கு இது போது மானதல்ல என்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.

Advertisment

ministerr

வென்று வா! வேலை நிச்சயம்.! என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போட்டிக்கு போனவர்களை ஊக்கப்படுத்தி இருந்தார். மற்றொரு பக்கம் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், இளைஞர்களை உற்சாகப்படுத்தி தானும் களத்தில் இறங்கி விளையாடி வருகிறார். இருந்தும், தமிழக வீரர்களால் சாதிக்க முடியவில்லை என்ற நமது அடுக்கடுக்கான கேள்வி களோடு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை சந்தித்தோம்.

நீங்கள் பதவியேற்ற பிறகு விளையாட்டில் அதிக ஆர்வமாக இருக்கிறீர்களே?v நான் பள்ளி, கல்லூரி காலங்களில் விளையாட்டில் ஆர்வமாக இருந்தேன். அதன்பிறகு பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது நான் செல்லும் கிராமங்களில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாடும் போது நானும் அவர்களுடன் சேர்ந்து விளையாடி அந்த வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன். கல்வியோடு விளையாட்டும் அவசியம் என்பதை வலியுறுத்தி, நல்ல வீரர்களை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு போவேன் என்பதை யும் கூறி வருகிறேன்.

Advertisment

கிராமங்களில் திறமை யான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சி கொடுப் பதில்லை என்ற குற்றச் சாட்டுகள் உள்ளதே?

உண்மைதான். கிராமங் களில் உள்ள திறமையான வீரர்கள் இதுவரை அடை யாளம் காணப்படவில்லை. ஆனால் இனிமேல் அப்படி இருக்காது. ஒவ்வொரு கிராமத் திலும் விளையாட்டுத் திடல்கள் உருவாக்கப்பட்டு அதிலிருந்து திறமையான வீரர்களையும் அதற்கேற்ற பயிற்சியாளர் களையும் தேர்வுசெய்து தரமான பயிற்சி கொடுத்து அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு போவோம். கடந்த ஆட்சியில் அம்மா உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி காலாவதியாக்கிவிட்டார்கள். இனிமேல் தரமான பயிற்சிக் கூடமாக இருக்கும்.

minister

Advertisment

மாவட்ட அளவில் உருவாக்கப்படும் உள்விளையாட்டு அரங்கங்கள் எப்படி உள்ளது? பல இடங்களில் இன்னும் பணிகள் முடிவடையவில்லையே?

ஆமாம்! புதுக்கோட்டையில் ஏராளமான சாதிக்கும் வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு நல்ல பயிற்சி, பயிற்சிக்கான மைதானம் இல்லை என்பதால் சாதிக்க முடியவில்லை. ஆனால் தற்போது உள்விளையாட்டு அரங்க பணிகளை தரமாக செய்ய நேரில் ஆய்வுசெய்து வருகிறேன்.

சர்வதேச போட்டிக்கான பயிற்சிக்கு தமிழக வீரர்கள் பாட்டியாலா போக வேண்டியுள்ளது என்கிறார்களே?

தமிழகத்தில் 4 இடங்களில் சர்வதேச போட்டிக்கு தயாராக பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு, நல்ல பயிற்சியாளர்களும் நியமிக்கப் படுவார்கள். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. விரைவில் முதல்வர் உத்தரவோடு தொடங்கப்படும். அதனால் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 50 பேர்வரை செல்வார்கள். அதிகமான பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள். இதற்காக திறமையான விளையாட்டு வீரர்கள் கண்டறி யப்பட்டு வருகிறார்கள். இனிமேல், "ஷூ இல்லாமல் பயிற்சி பெற்றேன்' என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

விளையாட்டு வீரர் களை 6 வயது முதலே தேர்வு செய்து அவர்களுக்கு தரமான பயிற்சி கொடுப்பதுடன், மனரீதியாக பாதிக்கப்படாமல் இருக்க அதற்கான பயிற்சி ஸ்போர்ட்ஸ் சைன்ஸ் உடன் பயிற்சி அளிக் கப்படணும். உசேன் போல்ட் தொடர்ந்து வெற்றி பெற ஸ்போர்ட்ஸ் சைன்ஸ்தான் காரணம். அதேபோல மீனவர்களில் ஏராளமானவர்கள் திறமையானவர்கள் இருந்தும் வேலை வாய்ப்புகள் இல்லை என்ற நிலை உள்ளதால் அவர்களுக்கு பாய்மரப் பயிற்சி அளித்து சர்வதேச போட்டிகளில் வெற்றிபெறச் செய்து வேலை வாய்ப்புகளையும் உருவாக்கு வோம்.

பல திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் வெளிமாநிலங்களுக்காக விளையாடி பெருமை சேர்க் கிறார்களே?

கடந்த காலங்களில் அப்படியிருந்தது. இனிமேல் அப்படி இருக்காது. இனி தொடர்ந்து வெற்றிக்கனிகளோடு தமிழக வீரர்கள் வருவார்கள் என்றார்.

-இரா.பகத்சிங்

___________________

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை!

சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அறிவுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 2019-வரை ஊக்கத்தொகை ரூ.30 ஆயிரம் மட்டும் தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் கூடுதல் தொகை வழங்கியுள்ளார்கள். அதனால் நீதிமன்றம் சென்றபோது, "இனிமேல் வெற்றிபெறுவோருக்கு ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும்' என்று அப்போதைய தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் கொடுத்துள்ளது. ஆனால் இதுபோன்ற வீரர்களுக்கு ஒருமுறை மட்டுமே போட்டியில் பங்கேற்க வாய்ப்பு என்பதால் முன்னதாக வெற்றிபெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு மற்ற மாநிலங் களைப் போல உரிய ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை, முதல்வர் வரை சென்றுள்ளது. "உரிய முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும்' என்றார் அமைச்சர்.